உள்ளூர் செய்திகள்

சம்பா சாகுபடியில் டி.ஏ.பி உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்கள் பயன் படுத்தலாம் - வேளாண் அதிகாரி தகவல்

Published On 2022-10-26 13:12 IST   |   Update On 2022-10-26 13:12:00 IST
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
  • பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடியில் டி.ஏ.பி. உரங்களுக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிப்பதாவது :

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். மாவட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர்பரப்பளவில் சம்பா சாகுபடிப் பரப்பு எதிர் பார்க்கப்படுகிறது.

பொதுப் பரிந்துரையாக மத்தியகால மற்றும் நீண்டகாலப் நெற்பயிர் களுக்குத் ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60, 20, 20 கிலோ தேவைப்படும். இச்சத்துக்கள் குறைவின்றிக் கிடைப்பதற்கு யூரியா 53 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடலாம். அல்லது 20:20:0:13 என்ற காம்ப்ளக்ஸ் உரம் 120 கிலோ அளவிலும் பொட்டாஷ் உரத்தினை 21 கிலோ அளவிலும் அடியுரமாக இடலாம்.

இதனால் நெற்பயிர் நன்கு செழிப்பாக வளர்வதால் மகசூல் அதிகரிக்கும். தொடர்ந்து மேலுரமாக யூரியா இடும்பொழுது ஒரு ஏக்கருக்கு 26 கிலோ என்ற அளவில் மேலுரமாக 3 முறை இட வேண்டும். காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்துவதனால் உரம் வீணாவது தடுக்கப்படுவதோடு பயிருக்குத் தேவையான உரங்கள் மண்ணில் தேவையான அளவு கிடைப்பதனால் பூச்சி, நோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறைகின்றது. பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் பயிரின் வளர்ச்சி சீராகி அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தழை, மணி, சாம்பல் சத்துக்களை உரப் பரிந்துரையின்படி இடுவதால் உரச் செலவு குறைவதோடு, பூச்சி, நோய்த் தாக்குதலும் குறைந்து அதிக மகசூல் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாவதால், ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தினைக் கடைப்பிடித்துப் பயனடைந்திடுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மெ.சக்திவேல் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News