உள்ளூர் செய்திகள்

பேருந்துகள் வந்து செல்லாததால் வெறிச்சோடி காணப்படும் ஆலங்குடி பேருந்து நிலையம்

Published On 2023-06-08 06:24 GMT   |   Update On 2023-06-08 06:24 GMT
  • பேருந்துகள் வந்து செல்லாததால் ஆலங்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது
  • பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டது வீண்

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆலங்குடி பேருந்து நிலையத்தில் கடைகள், பயணிகள் இருக்கை வசதி, தண்ணீர் வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் காத்திருந்து பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக உள்ளது. ஆனால் அதிகமான பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. கறம்பக்குடி, வெட்டன் விடுதி, மழையூர் போன்ற பகுதிகளில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பேருந்துகள் முற்றிலுமாக பேருந்து நிலையத்திற்கு செல்வதில்லை.

அதே போல் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை, கறம்பக்குடி, பேராவூரணி, கொத்தமங்கலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பல பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் காத்திருந்தால் பேருந்தில் ஏற முடியாது என்று பயணிகள் அரசமரம் பஸ் ஸ்டாப், வடகாடு முக்கம் பஸ்ஸ்டாப் என கடும் வெயிலில் காத்திருந்து , அங்கு வரும் பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

இவ்வாறு பயணிகள் வேறு பகுதிகளுக்கு சென்று பேருந்துக்காக காத்திருப்பதால், ஆலங்குடி பேருந்து நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றது. இது குறித்து பலமுறை பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களை அழைத்து இரவு பகல் எந்த நேரமும் அனைத்து பேருந்துகளும் ஆலங்குடி பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டுமென உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News