சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- புதுக்கோட்டை இரும்பாநாடு சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா இரும்பாநாடு கிராமத்தில் உள்ள பூமி நீளா சுந்தரவள்ளி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் பேரில் கடந்த சனிக்கிழமை உபய வேத பாராயணத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.அதனை தொடர்ந்து 3 நாட்களாக யாக வேள்விகள் நடைபெற்று வந்தது. யாக சாலை பூஜைகள் முடிந்த பின்னர், பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாசுதேவ பட்டாசார்யார் தலைமையில் ஆச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.