உள்ளூர் செய்திகள்

காரில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் திருட்டு

Published On 2022-08-27 14:08 IST   |   Update On 2022-08-27 14:08:00 IST
  • காரில் வைத்திருந்த 17 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
  • தனது ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்

புதுக்கோட்டை:

திருமயம் அருகே உள்ள பிலாக் குடிப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி அஞ்சலி (வயது 52). இவர் அந்தமானில் உள்ள கொழுந்தன் கணேசனின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தனது ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். காரை அவரது மகன் வெங்கடேசன் ஓட்டி வந்தார். காருக்குள் கணேசன் மகள் கார்த்திகா, மகன் கவி ஆகியோர் இருந்தனர். கீரனூர் புறவழிச்சாலையில் வரும்போது ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு கார் கண்ணாடிகளை மூடாமல் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது காருக்குள் இருந்த பேக் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் சப்- இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆசாமிகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News