விஷ பூச்சி கடித்து புதுச்சேரி துணை சபாநாயகர் சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி
- விஷ பூச்சி கடித்து காலில் வீக்கம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு.
- மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதி.
புதுச்சேரி:
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதுபோல் புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள மீட்பு பணியில் தொகுதி எம்.எல்.ஏ.வும் , துணை சபாநாயகருமான ராஜவேலு ஈடுபட்டு வந்தார்.
அப்போது நெட்டப்பாக்கம் தொகுதி, பண்டசோழநல்லுார், கரையாம்புத்தூரில் ஏரி உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
இந்த நிலையில், கரையாம்புத்தூரில் மீட்பு பணியில் இருந்த துணை சபாநாயகர் ராஜவேலு வெள்ள நீரில் நடந்து சென்ற போது அவரது காலில் விஷ பூச்சி கடித்தது.
இதனை பொருட்படுத்தாமல் அவர், மீட்பு பணியை தொடர்ந்தார். இதனிடையே விஷ பூச்சி கடித்ததில் அவரது காலில் வீக்கம் ஏற்பட்டு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நலம் குறித்து குடும்பத்தினரிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கேட்டறிந்தனர்.