உள்ளூர் செய்திகள்

குடிநீர் வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2022-10-15 15:12 IST   |   Update On 2022-10-15 15:12:00 IST
  • பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
  • பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சி நூற்றாண்டை கண்ட பேரூராட்சியாக இம்மாவட்டத்தில் உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சிமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும் பதவி வகித்து வருகின்றனர். பேரூராட்சி மன்ற செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை, ஒர்க் ஆர்டர் இப்பகுதியைச் சேர்ந்த 13-வது வார்டு திமுக கவுன்சிலரான தனக்கு காண்பிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியுடன் கூறினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன் பின்னர்,அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Tags:    

Similar News