உள்ளூர் செய்திகள்

சிறுமுகை விஸ்கோஸ் ஆலை பகுதியில் முகாமிடும் யானைகளால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-09-04 09:11 GMT   |   Update On 2023-09-04 09:11 GMT
  • இரவு நேரங்களில் ஆலையின் உடைந்த சுவர் வழியாக வெளியேறி ஊருக்குள் புக முயற்சி
  • வனத்துறையினர் நீண்டநேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பவானி நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சிறுமுகை வனச்சரகம் உள்ளது.

இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். வலசை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வழியே இடம் பெயர்வது வழக்கம்.

இப்படி இடம் மாறும் யானைகளில் சில உணவும், நீரும் ஓரிடத்தில் கிடைத்தால் அங்கேயே சில காலம் தங்கி விடுவதும் உண்டு. இவை காட்டு யானைகளுக்கே உண்டான இயல்பிற்கு மாறாக இயற்கையான வன தீவனங்களை தவிர்த்து விட்டு விவசாய பயிர்களை உண்டு பழகி விட்ட கிராப் ரைடர்ஸ் வகை யானைகள் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.

இந்த வகையில் சிறுமுகை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பழைய விஸ்கோஸ் ஆலையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அடர்ந்த காட்டை ஒட்டி பவானி ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த இந்த ஆலை பல்வேறு காரணங்களினால் மூடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் புதர்மண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஆலை வளாகத்தினுள் யானைகள் புகுந்து விடுகின்றன.

இவை பகல் நேரங்களில் ஆலைக்குள் ஓய்வெடுத்து விட்டு இரவு நேரங்களில் ஆலையின் உடைத்து சுவற்றின் வழியே வெளியேறி அருகில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலைக்குள் முகாமிடும் யானைகளின் எண்ணிக்கை மாறினாலும் அருகிலேயே ஆற்று நீரும், தீவனமும் கிடைப்பதால் எப்போதும் ஒரு யானைக்கூட்டம் இதனுள் இருப்பது வழக்கமாகி விட்டது.

இந்த நிலையில் நேற்று ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று தொழிற்சாலையிலிருந்து சாலை கடக்க முயன்றது. இதனை அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் யானை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்.

Tags:    

Similar News