உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அரசு பள்ளியை பொதுமக்கள் முற்றுகை

Published On 2023-06-13 08:51 GMT   |   Update On 2023-06-13 09:19 GMT
  • ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர்.
  • 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா உல்லத்தி ஊராட்சியில் பன்னிபுரா, ஏக்குனி உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் மலைவேடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. இதில் ஏக்குனி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் சென்றனர். அப்போது பன்னிபுரா, ஏக்குனி பகுதி மலைவேடர் இனத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து ஏக்குனி பள்ளிக்கூடத்தை காலை 10 மணிக்கு திடீரென முற்றுகையிட்டனர்.

மேலும் அப்பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தைகளை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மலை வேடர் இன மக்கள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பழனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மலை வேடர் இன மக்கள் வசித்து வருகிறோம். கடந்த 1999-ம் ஆண்டு வரை எங்களுக்கு இந்து மலைவேடர் பழங்குடியினர் என குறிப்பிட்டு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் அதன் பின்னர் 24 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் வழங்க வில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் எங்களின் குழந்தைகள் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் படித்து என்ன பயன். லட்சியத்துடன் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது, இதனால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் எங்கள் குழந்தைகளின் மாற்று சான்றிதழை கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பங்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் ஆவேசமாக கூறினர்.

தகவல் அறிந்த ஊட்டி வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மலைவேடர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மலை வேடர் இன மக்கள் தெரிவித்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News