ஓசூரில் போலி ஆவணங்கள் வழங்கி ரூ.16 லட்சம் மதிப்புள்ள இரும்பு குழாய்கள் கடத்தல் -லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
- ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.
- டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (52). இவர் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 28-8-2022 அன்று ஒரு லாரி டிரைவர் அவரிடம் வந்து தனது லாரிக்கு லோடு கேட்டார். இதனைத்து அவரிடம் செல்வகுமார் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.
பின்னர் அந்த லாரி டிரைவர், தனியார் கம்பெனி யிருந்து ரூ.15 லட்சத்து 33,304 மதிப்பிலான 19.5 டன் இரும்புக் குழாய்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அந்த இரும்புக்குழாய்கள் லோடு, திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டியது ஆகும். ஆனால் இதுநாள் வரை, அந்த டிரைவர் இரும்பு குழாய் லோடை, அங்கு ஒப்படைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வகுமார், சம்பந்தப்பட்ட டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.
இது குறித்து அவர் நேற்று ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.இச்சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.