உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே சுடுகாட்டில் உடலை புதைக்க எதிர்ப்பு-பொதுமக்கள் மறியல்

Published On 2023-10-13 14:22 IST   |   Update On 2023-10-13 14:22:00 IST
  • மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
  • சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த காவல்பட்டியில் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்கள் உடலை எரிப்பதற்கும், புதைப்பதற்கும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை வட்டாட்சியர், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்து இருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் இறந்து போனார். அவரது உடலை சர்ச்சைக்குரிய சுடுகாட்டில் புதைத்து சென்றனர்.

இதுபற்றி அறிந்ததும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தரப்பை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு வந்தனர்.

அவர்கள் சுடுகாட்டில் உடல்களை புதைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி -பழவேற்காடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காவல்பட்டியில் இருந்து உப்பளம் வரை ஏராளமான வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பகுருதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சுடுகாட்டு பிரச்சினை தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, கிராமத்திற்குள் வரும் சாலை அருகே சுடுகாடு உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளிகுழந்தைகள், பெண்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மாற்று சுடுகாட்டில் உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என்றனர்.

Tags:    

Similar News