உள்ளூர் செய்திகள்

தனிப்படை போலீசார் வேட்டை: தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2022-10-21 09:38 GMT   |   Update On 2022-10-21 09:38 GMT
  • குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
  • மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அரூர்,

அரூர் வட்டாரப் பகுதியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்படி, அரூர் டி.எஸ்.பி. பெனாசிர் பாத்திமா தலைமையில், காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு மற்றும் அரூர் குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் சந்தேகமான முறையில் வந்த மூவரை சோதனை செய்தனர். இந்த சோதனையில் சுமார் 21 கிலோ எடையுள்ள கஞ்சாவை அவர்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம், பத்தேரி கிராமத்தைச் சேர்ந்த முனிரெட்டி மகன் ரங்காரெட்டி (வயது 52), சின்னகௌக் பகுதியைச் சேர்ந்த மேடாநரசிம்மலு மகன் மேடாபார்த்தசாரதி (65), சேலம் மாவட்டம், கலரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் இளையரசு (எ) இளையா (23) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

இதேபோல நல்லம்பள்ளிவட்டம்,அதியமான்கோட்டை அருகே உள்ள தேவரசம்பட்டி சேர்ந்த சிவாஜி(55) என்பவர் அந்த பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனை செய்வதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரகசிய தகவலின் பேரில் நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிவாஜியை கையும்,களவுமாக பிடித்தனர்.விற்பனை செய்ய வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்து சிவாஜியை கைது செய்தனர்.

Tags:    

Similar News