உள்ளூர் செய்திகள்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகள் பெறலாம் -இணைப்பதிவாளர் தகவல்

Published On 2022-10-14 10:20 GMT   |   Update On 2022-10-14 10:20 GMT

கிருஷ்ணகிரி,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகள் பெற்று பயன் அடையலாம் என்று கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் கலப்பு உரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் விவசாயிகள் சாகுபடி செய்வதற்கு ஏதுவாக அனைத்து உரங்களும் தேவையான அளவு சங்கங்களில் இருப்பு உள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் அடிப்படையிலும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ரொக்க விற்பனை அடிப்படையிலும் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி சாகுபடிக்கு தேவையான உரங்களை பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் கூட்டுறவு சங்கங்களில் உரம் மற்றும் இதர செயல்பாடுகள் குறித்து ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720527&ல் ஓசூர் சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும்.

கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப் பள்ளி மற்றும் மத்தூர் ஆகிய வட்டாரங்கள் கட்டுப்பாட்டு அறை எண் 7338720526-ல் கிருஷ்ணகிரி சரக துணை பதிவாளரை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News