உள்ளூர் செய்திகள்

சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையையொட்டி தீவிரவாதிகள் போல் கடலூருக்குள் ஊடுருவிய 7 பேரை போலீசார் பிடித்து படகில் அழைத்து வந்த காட்சி.

கடலூர் துறைமுகத்தில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை:போலி வெடிகுண்டுகள்- துப்பாக்கிகள் பறிமுதல்

Published On 2023-06-29 09:03 GMT   |   Update On 2023-06-29 09:03 GMT
  • போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
  • போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.

கடலூர்:

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.

கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News