நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு 5 குழந்தைகளுடன் வந்து இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
- டொனிலாவை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர்.
- நான் எனது 5 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பாத்திமா நகரை சேர்ந்தவர் டொனிலா (வயது 28). இவர் இன்று காலை தனது 5 குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்தார்.
கலெக்டர் அலுவலகம் முன்பு வந்த போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை திறந்து அதில் இருந்து மண்எண்ணையை தன் மீது ஊற்றினார். இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் டொனிலாவை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்த போது டொனிலா கூறியதாவது:-
எனக்கும் கூத்தங்குழியை சேர்ந்த மிக்கேல்ராஜ் என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. எங்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என 5 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது கணவர் விவகாரத்து செய்துவிட்டார்.
ஆனால் குழந்தைகளை பராமரிப்பதற்காக இதுவரை மாதாந்திர நிவாரணம் எதுவும் வழங்கவில்லை. எனவே நான் எனது 5 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். எனது கணவரிடம் இருந்து நிவாரணம் வாங்கித்தரக்கோரி கூடன்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் .
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.