உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனையில் 38 பேர் கைது

Published On 2023-05-16 08:24 GMT   |   Update On 2023-05-16 08:24 GMT
  • கள்ள சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
  • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 13 -ம் தேதி 50-க்கு மேற்பட்டோர் கள்ளசாராயம் குடித்தனர். இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? மது பாட்டில்கள், சாராயம் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது 293 லிட்டர் சாராயம், 229 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 38 வழக்கு பதிவு செய்து 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கடத்தி வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News