உள்ளூர் செய்திகள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்று நடவு பணி தொடக்கம்

Published On 2023-07-11 08:35 GMT   |   Update On 2023-07-11 08:35 GMT
  • முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன.
  • இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

குன்னூர்,

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்காக 75 வகைகளில் ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைக் காண உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 6 லட்சம் சுற்றுலா பயணிகள், சிம்ஸ் பூங்காவுக்கு வந்து மரங்களையும், மலர்களையும் பார்த்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள இரண்டாவது சீசனில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலாமேரி தலைமையில், மலர் நாற்றுகளை பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர். முதற்கட்டமாக பால்சம் செடிகள் நடவு செய்யப்பட்டன. மேலும், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட சால்வியா பெக்கோனியா, பேன்சிடேலியா, டெல்பினியம் ஜெரோனியம் உட்பட 75 வகையான நாற்றுகள் நடவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இரண்டாம் சீசனுக்காக ஒரு லட்சத்து 91 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.

Tags:    

Similar News