உள்ளூர் செய்திகள்

வங்கி டெபிட், கிரெடிட் கார்டு மூலம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்

Published On 2023-07-22 09:01 GMT   |   Update On 2023-07-22 09:01 GMT
  • கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
  • கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும்.

சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க பல்வேறு வசதிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

டிக்கெட் கவுண்டர்களில் கட்டணம் செலுத்தி டோக்கன் பெறுதல், பயண அட்டை, கியூஆர் கோடு மற்றும் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெற்று செல்லுதல் போன்ற நடைமுறைகள் தற்போது உள்ளன.

பயணிகள் சிரமமில்லாமல் எளிதாக டிக்கெட் தானியங்கி கேட்டுகளில் செல்ல வசதியாக புதிய தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. மெட்ரோ ரெயில்களில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்து நிற்காமல் உடனே செல்ல வசதியாக டிக்கெட் பெறுவதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

வார நாட்களில் பயணிகள் அதிகளவில் பயணிக்கிறார்கள். தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.

இந்நிலையில் மெட்ரோ ரெயில் 2ம் கட்ட பணியில் அமைகின்ற ரெயில் நிலையங்களில் மெட்ரோ ரெயில் பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் கூடுதல் வசதிகளை நிர்வாகம் தர இருக்கிறது.

கவுண்டர்களில் காத்து நின்று டிக்கெட் பெற்று பயணிப்பதற்கு பதிலாக பயணிகள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டை காண்பித்து பயணம் செய்யும் நவீன தொழில் நுட்பம் கையாளப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரெயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் நுழைவு வாயலில் டெபிட், கிரெடிட் கார்டை காண்பித்தால் போதுமானது. கட்டண தொகை வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்வதோடு செல்போனில் இது பற்றிய விவரங்கள் வரும்.

வங்கி அட்டையை பயன்படுத்தும் முறையில் பயணிகள் காத்து நிற்க தேவையில்லை. கேட்டில் கார்டை காண்பிக்கும் போது உள்ளே செல்ல தானாகவே அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News