உள்ளூர் செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா: வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை

Published On 2025-04-01 11:49 IST   |   Update On 2025-04-01 11:49:00 IST
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர்.
  • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடை பெற்றது.

ஈரோடு:

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச் சந்தையும் செயல்பட்டு வருகிறது.

தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எப்பவும் வ.உ.சி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமாக பரபரப்புடன் காட்சியளிக்கும்.

இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி இன்று காலை ஆயிரக்கணக்கான காய்கறி வியாபாரிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் புனித நீரை எடுத்து ஊர்வலமாக வந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

இன்று காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். விடுமுறை அளிக்க ப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News