உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்க வேண்டும்
- சட்டசபையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் பேச்சு
- தனிக்காவல் நிலையங்கள் அமைத்து தரவும் கோரிக்கை
பெரம்பலூர்,
நேற்றைய சட்டப்பேரவை நிகழ்வின் போது மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க.வை சேர்ந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.அப்போது பேசிய அவர், "பெரம்பலூர் நகர், வி.களத்தூர், அகரம் சீகூரில் தனிக் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும்", என கோரிக்கை வைத்து பேசினார்.மேலும் அமைச்சர் உதயநிதியின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களை கனிவாக அணுகும் முறை, செயலாற்றும் பாங்கு ஒரு துறையோடு நின்றுவிடக்கூடாது. முதலமைச்சரின் துணை நின்று அனைத்து துறைகளிலும் மேற்கொள்ள வேண்டும். இன்று பலரும் வாழ்த்தும் வண்ணமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவி ஏற்று பலரும் பாராட்டத்தக்க வகையில் செயலாற்றி வருகிறார்.இன்னும் சொல்லப்போனால் அவர் பாணியில் நின்று விளையாடி போர், சிக்ஸர் என கலக்குகிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களிடம் அவரது கனிவான அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி நமது நம்பர் 1 முதலமைச்சரின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் அவரது உழைப்பு, சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு திட்டம் ஆகியவை குறித்த பணிகளை முதலமைச்சரின் துணை நின்று மேற்கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு பேசினார்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்ற பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரனின் சூசகமான இந்த பேச்சு தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.