உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் அருகே தொடர்மின் வெட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல்

Published On 2022-07-24 09:46 GMT   |   Update On 2022-07-24 09:46 GMT
  • தொடர் மின் தடையை கண்டித்தும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டியும் பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • புதிய மின்மாற்றி அமைத்து முறையாக மின் வினியோகம் செய்யப்படும். துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் ஊராட்சி விசுவக்குடி கிராமத்தில் தொடர் மின் தடையை கண்டித்தும், கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய வேண்டியும் பொதுமக்கள், அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், விசுவக்குடி கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. சில சமயங்களில் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்படுகிறது. இதனால் விசுவக்குடி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

மேலும் விசுவக்குடியில் சாக்கடைகளை சுத்தம் செய்யாமல் இருக்கிறார்கள். எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், என்று வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் மற்றும் அரும்பாவூர் போலீசார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, புதிய மின்மாற்றி அமைத்து முறையாக மின் வினியோகம் செய்யப்படும். துப்புரவு பணியாளர்களைக் கொண்டு முறையாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News