உள்ளூர் செய்திகள்

கருணை தொகை வழங்காததை கண்டித்து பெரம்பலூர் கோவில் பணியாளர்கள் தர்ணா

Published On 2023-03-02 06:16 GMT   |   Update On 2023-03-02 06:16 GMT
  • கருணை தொகை வழங்காததை கண்டித்து பெரம்பலூர் கோவில் பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
  • இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.

பெரம்பலூர்:

பெரம்பலூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயிலில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கருணை தொகை தராததை கண்டித்து கோயில் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 3 ஆயிரம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டு அனைத்து கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் பொங்கல் பரிசு கருணை தொகை ரூ. 3 ஆயிரம் பொங்கல் திருநாளைக்கு முன்பே வழங்கப்பட்டது.ஆனால் பெரம்பலூரில் உள்ள அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோயில் மற்றும் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் பணிபுரியும் எழுத்தர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், பட்டாச்சாரியார், உதவி பட்டாச்சாரியார், குருக்கள், பரிஜாகர், அன்னதான பணியாளர், காவலர், மண்டப காவலர், இரவு நேர காவலர் ஆகிய பணியில் உள்ள 14 பேருக்கு பொங்கல் பரிசு கருணை தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து பல முறை கருண தொகை வழங்க கேட்டும் கோயில் செயல் அலுவலர் வழங்கவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கோயில் பணியாளர்கள் நேற்று பெரம்பலூர் அருள்மிகு மதனகோபால சுவாமி திருக்கோவில் அலுவலகம் முன்பு எழுத்தர் ரவி தலைமையில் 3 பெண் அலுவலர்கள் உட்பட 14 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பொங்கல் பரிசு கருணை தொகையை உடனே வழங்கவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும், புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.




Tags:    

Similar News