உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-25 13:41 IST   |   Update On 2023-07-25 13:41:00 IST
  • கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
  • ஆர்ப்பாட்டத்திற்கு பின் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

பெரம்பலூர்,

தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான பெரம்பலூர் மாவட்ட அமைப்பு சார்பில் நேற்று காலை ஆா்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். காது கேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அவர்களை அரசாணை எண் 151-யின் படி உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு வேலைகளில் அவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடை முறையாக வழங்க வேண்டும். அரசு இலவச வீட்டுமனையை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டா் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணியை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News