உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகை

Published On 2022-07-19 09:10 GMT   |   Update On 2022-07-19 09:10 GMT
  • கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.
  • குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா மலையப்ப நகரை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை, இரவு நேரத்தில் வெளியேறும் கரும்புகையினால், அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்தவுடன் நிலக்கரி மூலம் அனைத்து எந்திரங்களையும் இயக்குவதற்கு ஆலை தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆலையை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் பின்புறம் உள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களும், ராமலிங்க நகரில் வசித்து வரும் கலைக்கூத்தாடிகள் குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தி குறைகளை கேட்டு வரும் முதல்-அமைச்சர், ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அந்த ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நாளை (புதன்கிழமை) ஆலையில் நிலக்கரி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்க நடைபெற்ற வரும் விழா ஏற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த டயர் தொழிற்சாலையில் எப்போதுமே நிலக்கரியை பயன்படுத்தக்கூடாது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News