உள்ளூர் செய்திகள்

200 ஆண்டுகள் பழமையான திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-06 15:33 IST   |   Update On 2022-07-06 15:33:00 IST
  • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
  • இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி கலந்துகொண்டனர்



பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நாளடைவில் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.

அதன் பின்னர் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். இதையடுத்து விரைவாக திருப்பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இந்த கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.

முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை தொடங்கியது. பின்னர் காலை 7 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி விமான ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி,

பிரகதீஸ் குமார் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் கிருஷ்ணராஜ், மோகன், சிவா, மணி, துரைசாமி, தொழிலதிபர் எஸ். பெரியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் பூலாம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News