உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனைகள்

Published On 2023-01-12 13:32 IST   |   Update On 2023-01-12 13:32:00 IST
  • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டது
  • ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் வெயிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு பருவத்தில் நிலக்கடலை விதைக்கும்போது சரியான தட்பவெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது. அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுப்பதற்கு நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4-கிராம் ட்ரைக்கோடெர்மோ விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான ரைசோபியம் 2 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் உயிர உரத்தினை, ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிர்உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

நிலக்கடலை சாகுபடியில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 80 கிலோ விதையினை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாகுறையைப் போக்க நிலக்கடலை நுண்ணூட்ட சத்து 5 கிலோவினை 2கிலோ மணலுடன் சேர்த்து வயலில் இட வேண்டும்.

விதைத்த 40 முதல் 45வது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது. இதனுடன் நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு மற்றும் அதிக மகசூலை பெற ஊட்டச்சத்து கலவையான ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் இரண்டு முறை பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேற்கண்ட உரிய வழிமுறைகளை கடை பிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News