உள்ளூர் செய்திகள்

மழை நீருடன் கலந்த கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

Published On 2023-09-10 15:53 IST   |   Update On 2023-09-10 15:53:00 IST
  • சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் வெளியேறி மழைநீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது.
  • பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தருமபுரி, 

தருமபுரி நகரில் நேற்று இரவு, 7 மணிக்கு சாரல் மழையுடன் தொடங்கி கனமழையாக மாறி ஒரு மணி நேரம் கொட்டியது. பல இடங்களில் உள்ள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் வெளியேறி மழைநீருடன் கலந்து வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையின் ஓரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் மழை நீர், சாக்கடை நீருடன் கலந்து பைபாஸ் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாதபடி தண்ணீர் ஓடியது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

தருமபுரி நான்கு வழி சாலையை இணைக்கும் இந்த சாலையில் தருமபுரி நகர போலீஸ் நிலையம் அருகில் சாலையின் அருகே உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தருமபுரி நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் தருமபுரி நகரில் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததாலும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்நிலையில் தருமபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சீர்கேடுகளை தருமபுரி மாவட்ட நிர்வாகம் சீரமைத்து நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர் வாரி நகரில் தூய்மையை ஏற்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Similar News