உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும்-ஆசிரியர்கள் கோரிக்கை

Published On 2023-03-19 15:18 IST   |   Update On 2023-03-19 15:18:00 IST
  • நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஒப்படைத்து, அதற்குரிய ஊதியத்தினை உடனே வழங்க வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சிக்கண்ணா வரவேற்புரையாற்றினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட வலைதள நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கோபி நிறைவு செய்து பேசினார். முடிவில், மாவட்ட பொருளாளர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

இந்தப் போராட்டத்தின் போது, நாடு முழுவதும் உள்ள பங்களிப்பினை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி) மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனே நிறுத்தி வைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை ஒப்படைத்து, அதற்குரிய ஊதியத்தினை உடனே வழங்க வேண்டும்.

பள்ளி இணைப்புகள், கற்பித்தலுக்கு தன்னார்வலர்கள் நியமனம், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை அங்கன்வாடிகளில் பணியமர்த்துவது போன்ற கல்வி நலனுக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருந்து நீக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

Similar News