உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பனங்கிழங்குகள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு

Published On 2023-01-08 13:35 IST   |   Update On 2023-01-08 13:35:00 IST
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
  • தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது.

எட்டயபுரம்:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறுவகைகள், சிறுதானியங்கள், பணப் பயிர்கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர்.

அவை தற்போது கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் அதன் மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் பாடுபட்ட கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும்.

நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது. தற்போது பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வருகிறது.

கடந்த வருடம் 25 கிழங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததால் 1½ அடி வளரவேண்டிய பனங்கிழங்கு தற்போது அடிப்பாகம் மட்டும் விரிவடைந்து அதிகம் வளராமல் உள்ளது. இருப்பினும் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

தைப்பொங்கலுக்கு ரேசன்கடைகளில் பச்சரிசி, வெல்லம், கரும்புடன் பனங்கிழங்கு வரக்கூடிய காலங்களில் வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

Tags:    

Similar News