உள்ளூர் செய்திகள்

ஊட்டி வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-30 14:39 IST   |   Update On 2023-06-30 14:39:00 IST
  • காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
  • பக்தர்கள் கோவிந்தா, வெங்கட்ரமனா என்று பக்தி கரகோஷம் எழுப்பினர்.

ஊட்டி,

ஊட்டி புது அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இது தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக காலை 7.35 மணிமுதல் சிறப்பு பூஜைகளுடன் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. அடுத்தபடியாக அக்னி மண்டல மகா கும்பாதிகள் விஜர்சனம், யாத்ரா தானம் செய்யப்பட்டு கடம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது ஊட்டி மாரியம்மன் கோவில் பூசாரி விநாயகம் தலைமையில், வேணு கோபால சுவாமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாத் ஆனந்தன் முன்னிலையில் பட்டாச்சாரியர்கள் கலசம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, வெங்கட்ரமனா என்று பக்தி கரகோஷம் எழுப்பினர்.

இதைதொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மதியம் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 3.05 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடத்தப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் ராஜேஸ் மணிகண்டன், ஆய்வாளர் ஹேமலதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள் லட்சுமி நாராயணன், பார்த்தசாரதி, ஹரி கிருஷ்ணன், சடகோபன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News