உள்ளூர் செய்திகள்

விலை வீழ்ச்சியால் வெங்காய விவசாயிகள் கவலை

Published On 2023-02-01 08:13 GMT   |   Update On 2023-02-01 08:13 GMT
  • விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.
  • அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர்.

தாராபுரம் : 

கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அதிகமான பனிப்பொழிவின் காரணமாக உள்ளூர் விவசாயிகள் தாமதமாக நடவு செய்ததால் திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் அறுவடை துவங்கவில்லை. துறையூர், குருவாரெட்டியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது.

கடந்த மாதம் கிலோ 100 ரூபாய்க்கு சில்லறை விலையில் விற்பனையானது. விவசாயிகளிடம் 90 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. பல விவசாயிகள் விதை வெங்காயத்திற்காக பழைய இருப்பு வெங்காயத்தை கொள்முதல் செய்ததால் விலை உச்சத்தில் இருந்தது.

கடந்த வாரம் தான் அறுவடை துவங்கியது. புதிய வெங்காயம் சந்தைக்கு வர துவங்கியவுடன் அதிகபட்ச சில்லறை விலை கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது கிலோ 40 ரூபாய்க்கு ரோட்டோர கடைகளில் கூவி கூவி விற்பனை செய்யப்படுகிறது.

கடந்தாண்டு அபரிமிதமான விளைச்சல் காரணமாக வெங்காயம் கேட்பார் இல்லாமல் இருந்தது. இதனால் ஏராளமான விவசாயிகள் உழவு ஓட்டி அழித்தனர். இதில் வெங்காய விவசாயிகள் பலரும் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டு அறுவடைக்கு முன் உச்சபட்ச விலைக்கு விற்பனையானதால் ஓரளவு விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், உள்ளூர் அறுவடை துவங்கும் முன்பே விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வெங்காய விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சில்லறை விலையில் 40 ரூபாய்க்கு விற்றால் விவசாயிகளிடம் கிலோ 30 ரூபாய்க்கு தான் கொள்முதல் செய்வர். சீசன் களை கட்டும் பொழுது வரத்து அதிகரிக்கும். கொள்முதல் விலை 30 ரூபாய்க்கும் கீழ் சரிந்தால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றனர். 

Tags:    

Similar News