உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் ஒருநாள் அடையாள போராட்டம்

Published On 2023-08-08 14:41 IST   |   Update On 2023-08-08 14:41:00 IST
  • கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.
  • ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ஊட்டி ஏ.டி.சி. திடலில் நடந்த போராட்டத்திற்கு தலைவர் கோவர்த்தனன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் ஆட்டோக்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

தனியார் டாக்சிகள் சமவெளி பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து பேக்கேஜ் என்ற முறையில் அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் அழைத்து செல்வதால் சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுலா வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் சுற்றுலா வாகன டிரைவர்கள் பல்வேறு மனுக்களை ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வழங்கிய போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். சுற்றுலா வாகன டிரைவர்கள் போராட்டத்தால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

Tags:    

Similar News