குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
- ஒரு தனியாருக்கு சொந்தமான ஆயில் கடையில் கடந்த 40 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.
- அரூர் மேட்டில் உள்ள தேவேந்திரர் தெரு அருகில் உள்ள பழைய கிணற்றில் அருணாசலம் இறந்த நிலையில் தண்ணீரில் பிணமாக மிதந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் என்.கொசவம்பட்டி கனபதி நகரை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 65). இவர் அப்பகுதியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் அருகில் துறையூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான ஆயில் கடையில் கடந்த 40 வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.
மோகனூர் அருகே அரூர் மேட்டில் உள்ள பொன்னர் சங்கர் கோவிலில் 48- வது மண்டல பூஜை திருவிழாவிற்கு செல்லப்பன் என்பவருடன் கடந்த 30 -ம் தேதி பொன்னர் சங்கர் கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார் . அதன் பிறகு அருணாசலம் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருணாசலத்தின் மகன் பழனிச்சாமி செல்லப்பன் வீட்டுக்கு சென்று விசாரித்த போது அருணாசலம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு செல்வதாக என்னிடம் கூறி சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அருணாசலத்தை பல்வேறு இடங்களில் தேடினர்.
அரூர் மேட்டில் உள்ள தேவேந்திரர் தெரு அருகில் உள்ள பழைய கிணற்றில் அருணாசலம் இறந்த நிலையில் தண்ணீரில் பிணமாக மிதந்தார். அவர் மது குடித்து போதையில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மோகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துர்க்கைசாமி வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.