உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்ட உணவகங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை

Published On 2023-09-20 09:02 GMT   |   Update On 2023-09-20 09:02 GMT
  • 32 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
  • சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்

ஊட்டி,

நாமக்கல் மாவட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு (சவர்மா) சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் நந்தகுமார், சிவராஜ் அடங்கிய குழுவினர், ஊட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கமர்சியல் சாலை, பாரதியார் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல்வேறு அசைவ உணவகங்களில் விதிமுறை மீறல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி சுரேஷ் கூறுகையில், பழைய கெட்டுப்போன இறைச்சிகளை உணவகங்களில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

Similar News