கூடுவாஞ்சேரி ஏரியை சீரமைக்க முடிவு- அதிகாரிகள் தகவல்
- நீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- கோடை காலம் என்பதால் ஏரியின் நீரை வெளியேற்றினால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி ஏரி புனரமைப்பு பணிக்காக ஏரியில் உள்ள நீரை வெளியேற்றுவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் 9 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் நீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள ஏரியின் கொள்ளளவையும் கரையை உயர்த்தியும் ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்றியும் ஏரியின் கரை மீது நடை பாதைகள் அமைத்து அதில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காகவும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பணிகளை மேற்கொள்ள நபார்டு வங்கி ரூ.6 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியது. இதற்கான பணியை கடந்த மார்ச் 15-ந்தேதி அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள வசதியாக ஏரியில் உள்ள நீரை வெளியேற்றும் நட வடிக்கைக்கு அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஏரி பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டது.
இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் 9 விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதேபோல் அதிகாரிகள் தரப்பில் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் தெ.குஜராஜ், வண்டலூர் தாசில்தார் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி ஏரியில் உள்ள நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று அங்கு தேக்கி வைத்து, நீரை வீண்டிக்காமல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் ஏரியின் நீரை வெளியேற்றினால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது ஏரியின் நீரை அருகில் உள்ள ஆதனூர் ஏரிக்கு கொண்டு சென்று தேக்கி வைப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். மேலும் தற்போது அறுவடைகள் நடைபெற்று வருவதால், விவசாயத்துக்கு தண்ணீர் தேவைப்படாது என்பதா லும் சீரமைப்பு பணியை தொடர ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.