உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் தனியார் கட்டிடத்தில் பதுக்கப்பட்ட சத்துணவு முட்டைகள்- போலீசார் அதிரடி ஆய்வு

Published On 2023-10-14 14:41 IST   |   Update On 2023-10-14 14:41:00 IST
  • மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் ஆலோசனை பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக தகவல்
  • பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்

 மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ஆட்டோ டிரைவர்.

இவரது வீட்டின் அருகில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை வாங்கி வைத்துள்ளதாகவும், இதனை ஆட்டோவில் எடுத்து சென்று கடைகளில் விற்பனை செய்வதாக சுற்று வட்டார பொதுமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பால்ராஜ் காலியாக உள்ள தனது பக்கத்து வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை அட்டை, அட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பால்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் ஆலோசனையின் பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக கூறினார்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் வந்து போலீசாரிடம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக முட்டைகள் இங்கு வைத்துள்ளோம்.

அரசு பள்ளிகளில் இந்த முட்டைகளை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் இவரது வீட்டின் அருகில் வைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அரசு பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளை தனியார் கட்டிடத்தில் வைக்க அனுமதி இல்லை.

எனவே தாசில்தாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ உரிய அனுமதி சீட்டு பெற்று முட்டைகள் வைத்திருந்த வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்ட வேண்டும். அல்லது பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News