உள்ளூர் செய்திகள்

அஞ்சலி செலுத்திய மக்கள்

தமிழ் இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது

Published On 2022-08-19 14:28 GMT   |   Update On 2022-08-19 14:28 GMT
  • தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தமிழ் வளர்ச்சித்துறையின் இளங்கோவடிகள் விருதினை பெற்றவர்.
  • எந்த இலக்கியமாக இருந்தாலும் ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக பேசும் புலமை கொண்டவர் நெல்லை கண்ணன்.

நெல்லை:

பிரபல இலக்கிய பேச்சாளரும், தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்டவருமான நெல்லை கண்ணன் (77) நேற்று காலமானார். அவர் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் நேற்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் விஷ்ணு மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான தமிழ் பற்றாளர்கள், அறிஞர்கள், பொதுமக்கள் நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலையில் இருந்து ஏராளமானோர் நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை நக்கீரன் கோபால் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழக செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலிக்குப் பிறகு திருநெல்வேலியில் உள்ள கருப்பன்துறை மயானத்தில் நெல்லை கண்ணன் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News