வேப்பனபள்ளி அருகே ஊருக்குள் புகுந்து மரங்களை உடைத்து நாசமாக்கிய காட்டு யானைகள்
- தொடர்ந்து விளைநிலங்களை அட்டகாசம் செய்து வருகிறது.
- ஊருக்குள் யானை வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனபள்ளி மற்றும் எப்ரி, சிகரலப்பள்ளி வனப்பகுதிகளில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் காட்டு யானைகளை தமிழக வனத் துறையினர் கடந்த வாரம் மகாராஜகடை மற்றும் ஏக்கல்நாத்தம் மலைப்பகுதிக்கு விரட்டிவிட்டனர். இந்த நிலையில் இரண்டு யானைகள் மட்டும் திரும்பி வந்து கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நந்த கோபால் என்பவருடைய விவசாய நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் மா மரங்களை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது.
சத்தம் கேட்டு சென்ற அப்போது கிராம மக்கள் இரண்டு காட்டு யானைகளையும் வெடிகள் பட்டாசுகள் மூலம் வனப்பகுதிக்கு விரட்டினர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 காட்டு யானைகள் ஊருக்குள் வந்து நாய்களை துரத்தி சென்றதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கொங்கனபள்ளி, கே. கொத்தூர் கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
மேலும் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இந்த இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.