உள்ளூர் செய்திகள்

கொளத்தூர் அருகேஒற்றை யானை தொடர் அட்டகாசம்

Published On 2023-04-22 08:05 GMT   |   Update On 2023-04-22 08:05 GMT
  • சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
  • வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

இங்குள்ள சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. கிராமத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

நள்ளிரவு நேரத்தில் யானை வருவதை அறிந்த கிராம மக்கள், வனத்துறை யினர் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொண்டும் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் விரட்டும்போது, வனப்பகுதிக்குள் செல்லும் யானை, மீண்டும் நள்ளிரவு நேரத்தில் கிராமத்துக்குள் வந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வனத்துறை யினரும் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி கண் விழித்து யானையை விரட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால், தார் காட்டில் இருந்து நீதிபுரம் வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், உணவு தேடியும் யானை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் யானையை அடர் வனப்பகு திக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News