காவேரிபட்டினம் கருக்கன் சாவடி அருகே உள்ள கழிவு நீர் கால்வாயில் சிறு பாலம் உடைந்து அதில் வெளியே தெரியும் கம்பிகள்.
காவேரிபட்டணம் அருகே கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் அமைக்க வேண்டும்
- கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கவில்லை.
- இரவு நேரத்தில் நடந்து செல்வோர் கம்பிகளை கவனிக்காமல் செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது.
காவேரிபட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பாலக்கோடு செல்லும் சாலையில் கருக்கன்சாவடி என்ற இடத்தில் முருகன் கோவில் உள்ளது. இங்கு முகூர்த்த நாளன்று ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலின் வழியாக தஞ்சிகான் கொட்டாய் மற்றும் பொன்னன்நகர் ஆகிய சிறு கிராமங்கள் உள்ளது . இக்கிராம மக்கள் காலம் காலமாக இந்த முருகர் ஆலயம் வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் பாலக்கோடு சாலை, அண்ணா நகர் சந்திப்பு சாலை முதல் ஏரிக்கால்வாய் வரை முருகன் ஆலயத்தின் முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
பணியின்போது ஏற்கனவே முருகர் ஆலயம் முன்பு தஞ்சிகான் கொட்டாய் மற்றும் பொன்னன் நகர் செல்லும் வழியில் காலம் காலமாக இருந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு கழிவுநீர் கால்வாய் பணிகள் செய்யப்பட்டது .
கழிவுநீர் கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கவில்லை. இதனால் தஞ்சிகான் கொட்டாய் , பொன்னன் நகர் மற்றும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் பொதுமக்கள் இவ்வழியில் சென்றுவர தினமும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
கழிவுநீர் கால்வாய் மீது தற்போது உள்ள சிறு பாலத்தில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளது.
இரவு நேரத்தில் நடந்து செல்வோர் கம்பிகளை கவனிக்காமல் செல்வதால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகிறது. கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தில் விரைந்து சிறுபாலம் கட்டித்தருமாறு அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.