மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகள்.
தேன்கனிக்கோட்டை அருகே மின் தகனமேடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
- குடியிருப்புகளுக்கு அருகாமையில் மின் தகனமேடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.
- குடியிருப்பு அருகே மயான மேடை அமைப்பதால் அதிருப்தி.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட சிங்கார தோப்பு என்ற இடத்தில் பேருராட்சி சார்பில் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அடுத்து தகன மேடை அமைக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாப்பிரான பள்ளி மற்றும் பூதுக்கோட்டை அத்திக்கோட்டை கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .தகவல் பேரில் தாசில்தார் குருநாதன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினர்.
மேலும் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் செல்வம், வி.ஏ.ஓ. சிவச்சந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அப்போது குடியிருப்புகளுக்கு அருகாமையில் மின் தகனமேடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மாற்று இடத்தில் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர் .
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் அனைவருக்கும் பொதுவான இடத்தில் அமைப்பதாக கூறி குடியிருப்புக்கு அருகாமையில் மின் தகன மேடை கொண்டு வர முயற்சிக்கின்றனர், அவ்வாறு விதி மீறி அமைக்கப்பட்டால் ஊருக்குள் சுகாதார சிர்கேடுகள் மற்றும் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஊருக்கு வெளியே இடம் பார்த்து மின் தகன மேடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.