உள்ளூர் செய்திகள்

டிராக்டருக்கு தீ வைப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-07 14:45 IST   |   Update On 2023-09-07 14:45:00 IST
  • ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
  • இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகளுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது, மரங்கள் வெட்டி சாய்ப்பது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

இதனிடையே இளம்பெண் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பேரில் வழக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி(42)என்பவருக்கு சொந்தமான டிராக்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகள், வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் மீண்டும் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம் பகுதிகளை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News