இறந்துபோன வில்வித்தை வீரர் வசந்த்.
சங்ககிரி அருகே வில் வித்தை வீரர் சாவில் மர்மம் நீடிப்பு
- தாய் தேன்மொழி வசந்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட–போது அவர் அழைப்பை எடுக்க வில்லை.
- செல்லாங்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது செல்போன் இருந்ததாகவும், அதற்கு அருகில் டூவீலர் இருப்பதாகவும், 2 செருப்புகள் அங்குள்ள ஒரு குட்டையில் மிதப்பதாகவும் கூறியுள்ளார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா சாணார்பட்டி அருகே கோரணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் வசந்த் (வயது 23), வில்வித்தை வீரரான இவர், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று முன்னாள் தமிழக முதல்-அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
மெடிக்கல் கடை
இவர், எடப்பாடி அருகே, வெள்ளாண்டிவலசு என்ற இடத்தில் விஜய் பார்மசி என்ற பெயரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். வழக்கமாக காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி விடுவார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடைக்கு சென்ற வசந்த், அன்று இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் தாய் தேன்மொழி வசந்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட–போது அவர் அழைப்பை எடுக்க வில்லை.
இதனால் பயந்துபோன தேன்மொழி, தனது இளைய மகன் விஜய் ஆனந்துடன் மெடிக்கல் கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டி இருந்தது. இதையடுத்து இருவரும் பல இடங்களில் வசந்தை தேடினர். இரவு நேரம் என்பதால் எப்படியும் தனது மகன் வீட்டிற்கு வந்து விடுவார் என நினைத்து தேன்மொழியும், விஜய் ஆனந்தும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணிக்கு, வசந்தின் மெடிக்கல் அருகே அரிசி கடை வைத்துள்ள செந்தில்குமார் என்பவரிடம், தனது மகன் கடைக்கு வந்த விபரம் குறித்து தேன்மொழி கேட்டுள்ளார். அப்போது அவர், தான் இரவு 8:45 மணிக்கு அரிசி கடையை மூடும்போது, வசந்தை மெடிக்கலில் பார்த்ததாக கூறியுள்ளார்.
குட்டையில் உடல் மீட்பு
இதையடுத்து தேன்மொழி, மகன் மாயமான தகவலை ஹைதராபாத்திற்கு லாரி வேலைக்கு சென்று இருந்த கணவர் ஆசைத்தம்பியிடம் கூறியுள்ளார். உடனே ஆசைதம்பி, வசந்த் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அதனை எடுத்து பேசிய நபர், சங்ககிரி அருகே தேவண்ணக்கவுண்டனுார் கிராமம், செல்லாங்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு பாறையின் மீது செல்போன் இருந்ததாகவும், அதற்கு அருகில் டூவீலர் இருப்பதாகவும், 2 செருப்புகள் அங்குள்ள ஒரு குட்டையில் மிதப்பதாகவும் கூறியுள்ளார். உடனே ஆசைத்தம்பி, தேன்மொழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்மொழி, அங்குள்ள குட்டையில் இறந்த நிலையில் இருந்த மகனின் உடலை பார்த்து கதறித் துடித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வசந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்னர்.
இந்நிலையில், வசந்தின் தலை, கண்கள், காது, உதடு மற்றும் உடலின் பல பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், இதனால் வசந்தை யாரோ வலுக்கட்டாயமாக காட்டிற்கு அழைத்துச் சென்று அடித்து கொன்று குட்டையில் போட்டுள்ளதாக தேன்மொழி கூறினார்.
மேலும் தனது மகன் வில்வித்தை போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்று, முன்னாள் தமிழக முதல்-அமைச்சரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால் சில நபர்களுக்கு என் மகன் மீது போட்டி, பொறாமை உண்டு. அவர்களால் தான் எனது மகன் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் தேன்மொழி நேற்று புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்துள்ளார். இது குறித்து டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் கூறுகையில், வில்வித்தை வீரர் வசந்த் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்தால் தான் கொலையா? தற்கொலையா? என தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.