உள்ளூர் செய்திகள்

முதுமலை பகுதியில் இருந்து அரிசி கொம்பனை பிடிக்க வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினர் - துதிக்கையில் காயத்துடன் சுற்றும் அரிசிகொம்பன் யானை.

அரிசி கொம்பன் யானையை பிடிக்க முதுமலை பொம்மன் குழுவினர் வருகை

Published On 2023-05-31 05:47 GMT   |   Update On 2023-05-31 05:47 GMT
  • அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
  • மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.

சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.

இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.

அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.

அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News