சிவகாசி அருகே தாய்-மகள் தற்கொலை: குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு
- லோகேசை அவரது தந்தை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.
- மகனை கணவர் அழைத்து சென்றதால் வனிதாராணி மனவேதனை அடைந்தார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வனிதா ராணி(வயது 35). இவரது கணவர் வேலுச்சாமி. குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
மனைவியை பிரிந்து சென்ற வேலுச்சாமி விருதுநகர் அருகே மலைப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகன் லோகேஷ் (15), காவிய பிரியா (12) ஆகிய இருவரும் தாய் வனிதா ராணியுடன் வசித்து வந்தனர்.
அவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து மகன், மகளை படிக்க வைத்து வந்தார். லோகேஷ் 10-ம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார். அவர் தன்னை பாலிடெக்னிக்கில் சேர்க்குமாறு தாயிடம் கூறியிருக்கிறார். ஆனால் படிக்க வைக்க வசதியில்லை என்று தாய் வனிதா ராணி கூறியிருக்கிறார்.
தாய் அவ்வாறு கூறியதை லோகேஷ் தனது தந்தையை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து லோகேசை அவரது தந்தை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். மகனை கணவர் அழைத்து சென்றதால் வனிதாராணி மனவேதனை அடைந்தார்.
இதனால் தனது மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வனிதாராணி மற்றும் அவரது மகள் காவிய பிரியா ஆகிய இருவரும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அதுகுறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து தூக்கில் பிணமாக தொங்கிய தாய்-மகள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.