உள்ளூர் செய்திகள்

அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கத்தேர் இழுத்த காட்சி.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு ஆய்வு - தங்கத்தேர் இழுத்தும் வழிபட்டனர்

Published On 2022-10-27 09:05 GMT   |   Update On 2022-10-27 09:05 GMT
  • விழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
  • அமைச்சர்கள் அன்னதான மண்டபத்தில் சாப்பிட்ட பக்தர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தனர்

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

30-ந் தேதி சூரசம்ஹாரம்

விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30-ந் தேதியும், திருக்கல்யாணம் 31-ந் தேதியும் நடைபெறுகிறது.

அமைச்சர்கள்

திடீர் ஆய்வு

கோவில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டனர்.

தங்கத்தேர் இழுத்து வழிபாடு

அப்போது கோவில் அன்னதான மண்டபத்தில் சாப்பிட்ட பக்தர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் செயல்படும் சிறப்பு மருத்துவ முகாமையும், சுகாதார வசதிகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தங்கத்தேரை இழுத்து தொடங்கி வைத்து வழிபாடு செய்தனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கோவில் இணை ஆணையர் அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3-ம் நாள் விழா

3-ம் திருநாள இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும் காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் வழக்கம் போல் சுவாமியும் அம்பாளுடன் தங்க தேரில் கிரி வீதி உலா வருதல் நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன், இணை ஆணையர் (பொ றுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News