உள்ளூர் செய்திகள்

தொப்பூர் இரட்டைப்பாலம் அருகே நள்ளிரவு விபத்து: அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதல்; லாரி டிரைவர் சாவு

Published On 2022-10-13 14:47 IST   |   Update On 2022-10-13 14:47:00 IST
  • சரக்கு லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கண்டெய்னர் வாகனத்தின் மீது மோதி உள்ளது.
  • வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே மோதிக் கொண்டு நின்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டைப்பாலம் அருகே நள்ளிரவு 2 மணியளவில் தருமபுரியில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது.

அதனை மேட்டூர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(வயது 63) ஓட்டிச் சென்றுள்ளார். அதன் பின்னால் அசாம் மாநிலத்தில் இருந்து சேலத்தை நோக்கி சிலிக்கான் கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இரட்டைப் பாலத்தை கடந்து சென்ற போது திடீரென சரக்கு லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கண்டெய்னர் வாகனத்தின் மீது மோதி உள்ளது.

இதனால் அந்த வாகனம் தருமபுரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எதிர்புறம் உள்ள சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலைக்கு சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன்களை தாண்டி சென்று எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்டவற்றின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.

இதில் கண்டெய்னர் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பிக் அப் வாகனத்தின் ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுற்றுலா பேருந்தில் இருப்பவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. வாகனங்கள் அனைத்தும் சாலையிலேயே மோதிக் கொண்டு நின்றதால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல்துறையினர் சாலையில் கவிழ்ந்த வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் சென்றன. மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News