உள்ளூர் செய்திகள்

மெட்ரோ ரெயில் சேவை திட்டத்தை ஓசூர் வரை நீட்டிக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- முதல்-அமைச்சருக்கு, செல்லகுமார் எம்.பி. கோரிக்கை

Published On 2022-07-02 15:22 IST   |   Update On 2022-07-02 15:22:00 IST
  • முதல்-அமைச்சர் ஸ்டாலினை செல்லக்குமார் எம்.பி.சந்தித்து மனு கொடுத்தார்.
  • ஓசூர் வரை மெட்ரோ ரெயில் இயக்கம் திட்டம் குறித்து பேசினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் (காங்கிரஸ்) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு மெட்ரோ ரெயில் சேவை பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்பட்டு வருகிறது. பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்கப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை நிமித்தமாக, மருத்துவமனை, வியாபார நிமித்தமாக, கல்லூரி படிப்பிற்காக பெங்களூரு மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் பயனுள்ளதாகவும், லாபகரமானதாகவும் அமையும்.

மெட்ரோ ரெயில் சேவை வருவதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு சுற்றுச் சூழல் பாதிப்பு மிகவும் குறைந்துவிடும்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியும், மத்திய நகர்புற வளர்ச்சித்துறை மந்திரியையும், துறை செயலாளரையும் நேரில் சந்தித்து இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தேன். மத்திய மந்திரியும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இரு மாநில அரசிற்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இது மாநில அரசு சம்பந்தமானது என்பதால் இரு மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு தன் பங்களிப்பை பரிசீலிக்கும் என்றும் எனக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அண்மையில் கர்நாடகா முதல்-மந்திரியை அம்மாநில முன்னாள் முதல்-மந்திரி சித்தராமை யாவுடன் சந்தித்து இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்துள்ளேன். இதன் பொருட்டு பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைவர் கடந்த மே 23-ந் தேதி மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலருக்கு கடிதம் எழுதப்பட்டது.

அதில், இந்த திட்டத்திற்கு கர்நாடகா முதல்-மந்திரி அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், தமிழக அரசு அதற்கான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என்றும் கர்நாடகா முதல்-மந்திரி குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் இரண்டு மாநில அரசு பகுதிகளை இணைக்கும் திட்டம். மெட்ரோ ரெயில் சேவைக்கான செலவு அதிகமாக இருப்பின் அதே பயனுடன் ஆனால் குறைந்த செலவினமான மெட்ரோ லைட் திட்ட சேவையை செயல்படுத்தினால் போதும். இரு மாநில அரசின் பங்கேற்பு மத்திய அரசின் பங்களிப்பு சேர்ந்து செயல்படுத்த வேண்டியுள்ளது.

எனவே கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சியோடு மிக வேகமாக வளர்ந்து வருகிற ஓசூர் மாநகராட்சியின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ஓசூரில் இருந்து பொம்மசந்திரா 20 கி.மீ., தூரம் உள்ளது. அதில் தமிழக எல்லை என்பது 9 கிலோ மீட்டர் தான் உள்ளது. எனவே தாங்களே இத்திட்டத்தை முன்னெடுத்து நிறைவேற்றித் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News