கோடைக்காலங்களில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை
- தற்போது தேன்கனிக்கோட்டை, நொகனூர் வனப்பகுதியில் 13 யானைகள் உள்ளன.
- கோடையில் வனவிலங்குகள் வெளியே வராமல் இருக்க தண்ணீர் தொட்டியில் அமைக்கப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் 1,501 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இங்கு காவேரி வடக்கு மற்றும் தெற்கு சரணாலயங்கள் உள்ளன. இதில் யானைகள், காட்டு எருமைகள், மான்கள், கரடிகள், சிறுத்தைகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
கோடைக்காலங்களில் ஆண்டுதோறும் தண்ணீர் தேடி கர்நாடகாவின் பன்னர் கட்டாவிலிருந்து 200 க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு இடம் பெயர்வது வழக்கம்.
கர்நாடக வனப்பகுதியி லிருந்து கடந்தாண்டு 100-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகள் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் சானமாவு, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் குழுவாக பிரிந்து சென்று அருகே உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வந்தன. அந்த யானைகளை ஒன்று சேர்த்து கடந்த மாதம் மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர்.
இந்நிலையில் தற்போது கோடைக்கு முன்னரே கடும் வெயில் உள்ளதால், வனத்தில் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்துள்ளன. இதனால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தண்ணீர் தேடி கிராமங்களுக்கு படையெடுக்கும் என்பதால், வனத்துறையினர் வனப்பகுதியில் கசிவு நீர் குட்டை, ஆழ்துளை கிணறுகள், தீவனப்புல் தோட்டம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தேன்கனிக்கோட்டை வனசரகத்தில் தொழுவ பெட்டா, அய்யூர், கெம்பகரை, கொடகரை பகுதிகளில் நிரந்தமாக 60 யானைகள் உள்ளன.
கடந்த வாரம் கர்நாடகாவி லிருந்து 70 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. அதனை மீண்டும் ஜவளகிரி வழியாக பன்னர்கட்டா வனப்பகுதிக்கு இடம்பெயர செய்து விட்டோம். தற்போது தேன்கனிக்கோட்டை, நொகனூர் வனப்பகுதியில் 13 யானைகள் உள்ளன.
வனப்பகுதியில் ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது. இதனால் கோடையில் வனவிலங்குகள் வெளியே வராமல் இருக்க தண்ணீர் தொட்டி அமைத்தல், ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புதல், கசிவு நீர் குட்டை கட்டுதல், தடுப்பணை கட்டுதல், பழுதடைந்த கசிவு நீர் குட்டையை புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அது மட்டும் அல்லாமல் காப்புகாட்டிற்குள் தீவன தோட்டமும் அமைத்து வருகிறோம். இதன் மூலம் வனவிலங்குகள் வெளியே வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் என கூறினார்.