உள்ளூர் செய்திகள்

சென்னையில் தியாகிகள் தினத்தையொட்டி சிக்னல்களில் போக்குவரத்து நிறுத்தம்- 2 நிமிடம் அஞ்சலி செலுத்திய வாகன ஓட்டிகள்

Published On 2023-01-30 09:11 GMT   |   Update On 2023-01-30 09:11 GMT
  • தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன.
  • அஞ்சலி செலுத்திய பிறகு சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.

சென்னை:

இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த நேரத்தில் சென்னை நகரின் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படியும் போலீசார் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன. அனைத்து வாகனங்களும் அப்படியே நின்றன. வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.

ஸ்பென்சர் சிக்னல், வேப்பேரி, அண்ணாசிலை, சென்ட்ரல், எழும்பூர் பாத்தியன் சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம் டவுட்டன், அடையாறு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.

Tags:    

Similar News