ஓசூர் மாநகராட்சியில், மீண்டும் மஞ்சப்பை திட்டம்
- ஓசூர் உழவர் சந்தையில் ரூ.10 க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திர பயன்பாட்டை மேயர் சத்யா தொடங்கிவைத்தார்.
- வரையப்பட்ட மீண்டும் மஞ்சப்பை ஓவியங்களை பார்வையிட்ட மேயர், அவர்களுடன் இணைந்து ஓவியங்களை வரைந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் தினந்தோறும் அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுவதால் அவற்றின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ள "மீண்டும் மஞ்சப்பை" என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் மஞ்சப்பையை பயன்படுத்தவும்
இலவசமாக மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஓசூர் பஸ் ஸ்டாண்ட், ராமநாயக்கன் ஏரிக்கரை பூங்கா ஆகிய இடங்களில் மாநகராட்சி மேயர் சத்யா, கமிஷனர் சினேகா ஆகியோர் பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சப்பைகளை வழங்கினர்.
மேலும் ஓசூர் உழவர் சந்தையில் ரூ.10 க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திர பயன்பாட்டை மேயர் சத்யா தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து,அவரது தலைமையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தூய்மை உறுதிமொழி எடுத்து கொண்டனர். பின்னர், ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் வரையப்பட்ட மீண்டும் மஞ்சப்பை ஓவியங்களை பார்வையிட்ட மேயர், அவர்களுடன் இணைந்து ஓவியங்களை வரைந்தார்.
இதில், சுற்றுச்சூழல் பொறியாளர் ரங்கராஜன், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் கலந்துகொண்டனர்.